
Menopause & Midlife
இந்தியாவில் மெனோபாஸ் (மாதவிடாய் நிறுத்தம்): அறிகுறிகள், சிகிச்சை மற்றும் நடுத்தர வயது ஆரோக்கியத்துக்கான நடைமுறை வழிகாட்டி
அறிகுறிகள், சிகிச்சை மற்றும் நடுத்தர வயது ஆரோக்கியத்துக்கான நடைமுறை வழிகாட்டி
பெரிமெனோபாஸ் காலத்தில் இருக்க, திடீர் உடல் சூடு ஏற்பட்டிருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.
மாதவிடாயில் மாற்றங்கள், சரியாகத் தூங்க முடியாமல் இருப்பது, கவனம் செலுத்துவதில் சிரமம் அல்லது மூட்டு வலி ஆகியவை முதலில் தெரியலாம். வேலை, குடும்பம், அன்றாடப் பொறுப்புகளுக்கு நடுவே, ‘இது மன அழுத்தமா? வயதாகிறதாலா? அல்லது பெரிமெனோபாஸ் காரணமா?’ என்று தோன்றலாம்.
உதவி பெற மாதவிடாய் முற்றிலும் நிற்கும் வரை காத்திருக்க வேண்டியதில்லை.
இந்த மாற்றங்களின் தொடர்பை ஆரம்பத்திலேயே கவனிப்பது, உடலில் என்ன நடக்கிறது என்பதையும் அடுத்து என்ன செய்யலாம் என்பதையும் புரிந்துகொள்ள உதவும்.
மெனோபாஸ்: ஒரு பார்வையில்
வேறு மருத்துவக் காரணம் இல்லாமல், தொடர்ந்து 12 மாதங்கள் மாதவிடாய் வராதபோது மெனோபாஸ் ஏற்பட்டதாகக் கருதப்படுகிறது. அதற்கு முந்தைய மாற்றங்கள் பல ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கலாம். அறிகுறிகளும் காலப்போக்கில் மாறலாம்.
இந்திய மெனோபாஸ் சங்கத்தின் நாடு தழுவிய ஆய்வில், மெனோபாஸ் ஏற்படும் சராசரி வயது 46.2 ஆண்டுகள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைவருக்கும் ஒரே காலவரிசை இருப்பதில்லை. சில அறிகுறிகள் விரைவில் குறையலாம்; மற்றவை பல ஆண்டுகள் தொடரலாம்.
தூக்கம், வேலை, மனநிலை, உறவுகள் அல்லது உடல் சௌகரியம் பாதிக்கப்பட்டால், சிரமங்கள் கடுமையாகும் வரை உதவி கேட்கக் காத்திருக்க வேண்டியதில்லை.
அடுத்து, உடலில் என்ன மாறுகிறது என்பதைப் பார்ப்போம்.

மெனோபாஸ் என்றால் என்ன?
மெனோபாஸ் வாழ்க்கையின் இயல்பான கட்டம்; நோயல்ல. இருந்தாலும், வாழ்க்கையைப் பாதிக்கும் அறிகுறிகளுக்கு பராமரிப்பு தேவை.
பெரிமெனோபாஸ் காலத்தில் ஈஸ்ட்ரோஜன், புரோஜெஸ்டிரோன் அளவுகள் ஏறி இறங்கி, பின்னர் குறைந்த அளவில் நிலைபெறுகின்றன. அதனால்தான் அறிகுறிகள் எப்போது வரும் என்பதை எதிர்பார்ப்பது சிரமமாக இருக்கலாம். மாதவிடாய் மட்டுமல்லாமல் தூக்கம், மனநிலை, எலும்புகள், தசைகள், யோனி மற்றும் சிறுநீர்ப்பாதை ஆரோக்கியமும் பாதிக்கப்படலாம்.

மெனோபாஸின் நிலைகள்
பெரிமெனோபாஸ், அதாவது மெனோபாஸுக்கு முந்தைய மாற்றங்கள் தொடங்கும் காலம்
ஹார்மோன் அளவுகள் ஏறி இறங்குகின்றன. மாதவிடாய் முறை மாறலாம்; மாதவிடாய் வந்துகொண்டிருக்கும்போதே அறிகுறிகள் தொடங்கலாம்.
மெனோபாஸ்
வேறு மருத்துவக் காரணமின்றி தொடர்ந்து 12 மாதங்கள் மாதவிடாய் வராதபோது அடையும் நிலை.
போஸ்ட்மெனோபாஸ்
மெனோபாஸுக்குப் பிந்தைய ஆண்டுகள். சில அறிகுறிகள் குறையலாம்; மற்றவை தொடரலாம்.
40 முதல் 45 வயதுக்குள் மெனோபாஸ் ஏற்பட்டால் அது முன்கூட்டிய மெனோபாஸ் (early menopause) எனக் கருதப்படுகிறது. 40 வயதுக்கு முன்பே சினைப்பைகளின் வழக்கமான செயல்பாடு குறைவது premature ovarian insufficiency (POI) எனப்படுகிறது; இதற்கு மருத்துவ மதிப்பீடு தேவை. இரண்டு சினைப்பைகளும் அகற்றப்படுதல், கீமோதெரபி அல்லது இடுப்புப் பகுதியில் கதிர்வீச்சு சிகிச்சைக்குப் பிறகும் மெனோபாஸ் ஏற்படலாம்.
பெரிமெனோபாஸ் பெரும்பாலும் 40 வயதுகளில் கவனிக்கப்படுகிறது; சிலருக்கு முன்பே தொடங்கலாம். முன்பு சீராக இருந்த மாதவிடாய் சுழற்சியில் மாற்றம் ஏற்படுவது முதல் அறிகுறிகளில் ஒன்றாக இருக்கலாம்.
மன அழுத்தம் மெனோபாஸை ஏற்படுத்தாது. ஆனால் மாதவிடாய், தூக்கம், மனநிலை, ஆற்றல் ஆகியவற்றைப் பாதிக்கலாம். அதனால் இரண்டையும் வேறுபடுத்துவது சில நேரங்களில் சிரமமாக இருக்கலாம்.
பெரிமெனோபாஸ் மற்றும் மெனோபாஸ் காலத்தில் என்னென்ன அறிகுறிகள் ஏற்படலாம்?
மாதவிடாய் மாற்றங்கள், திடீர் உடல் சூடு அல்லது இரவு வியர்வை, தூக்கத்தில் மாற்றங்கள், மனநிலை அல்லது கவனத்தில் மாற்றங்கள், மூட்டு வலி அல்லது விறைப்பு, யோனி அல்லது சிறுநீர்ப்பாதை மாற்றங்கள் ஏற்படலாம்.
மெனோபாஸுக்கு ‘சரியாக 34 அறிகுறிகள்’ என்ற மருத்துவ ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட பட்டியல் இல்லை. ஒவ்வொரு பெண்ணின் அனுபவமும் வேறுபடும். ஒரு பட்டியலுடன் பொருந்துவதைவிட, உங்கள் வழக்கமான உடல்நிலையில் என்ன மாறியுள்ளது என்பதே முக்கியம்.
அறிகுறிகள் வருவதும் குறைவதுமாக இருக்கலாம்; ஒன்றோடு ஒன்று சேர்ந்து தோன்றலாம்; காலப்போக்கில் மாறலாம். சிலவற்றை ஹார்மோன் மாற்றங்களுடன் எளிதில் தொடர்புபடுத்தலாம்; மற்றவற்றை அப்படிக் கண்டறிவது சிரமமாக இருக்கலாம்.
ஆசியப் பெண்களிடம் மூட்டு மற்றும் தசை சார்ந்த சிரமங்கள் குறிப்பாக அதிகமாகத் தென்படலாம் என்று இந்திய மெனோபாஸ் சங்கத்தின் வழிகாட்டுதல்கள் குறிப்பிடுகின்றன.
ஒவ்வொரு புதிய அறிகுறிக்கும் மெனோபாஸ்தான் காரணம் என்று கருத வேண்டாம். தொடர்ந்து இருக்கும் அல்லது வழக்கத்திற்கு மாறான மாற்றங்களுக்கு மருத்துவ மதிப்பீடு தேவை.
உதவி கேட்க மாதவிடாய் முற்றிலும் நிற்கும் வரை காத்திருக்க வேண்டியதில்லை.
இது மெனோபாஸ்தானா? எப்படிக் கண்டறிவது?
சோர்வு, ஒழுங்கற்ற மாதவிடாய், மனநிலை மாற்றங்கள், எடை மாற்றங்கள், மூட்டு வலி போன்றவை ரத்தசோகை, தைராய்டு பிரச்சினைகள், வைட்டமின் குறைபாடுகள் அல்லது PCOS காரணமாகவும் ஏற்படலாம். அறிகுறிகளின் போக்கைப் புரிந்துகொண்டு, தேவைப்பட்டால் பிற காரணங்களைச் சோதிப்பதே நோக்கம்.
45 வயது அல்லது அதற்கு மேற்பட்ட, பொதுவான அறிகுறிகளும் மாதவிடாய் மாற்றங்களும் உள்ள பெரும்பாலான ஆரோக்கியமான பெண்களுக்கு, வயது, அறிகுறிகள் மற்றும் மாதவிடாய் வரலாற்றின் அடிப்படையிலேயே மெனோபாஸ் பொதுவாகக் கண்டறியப்படுகிறது.
பெரிமெனோபாஸ் காலத்தில் ஹார்மோன் அளவுகள் மாறிக்கொண்டிருப்பதால், வழக்கமாக FSH, estradiol அல்லது AMH பரிசோதனைகள் தேவையில்லை. நிலை தெளிவாக இல்லாதபோது, POI சந்தேகிக்கப்படும்போது அல்லது வேறு உடல்நலப் பிரச்சினை காரணமா என்பதை அறிய வேண்டியபோது பரிசோதனைகள் உதவலாம்.
ஆலோசனைக்கு முன், மாதவிடாய் மாற்றங்கள், உங்களை அதிகமாகப் பாதிக்கும் அறிகுறிகள், தூக்கம், அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் பாதிப்புகள் ஆகியவற்றைக் குறித்துக்கொள்ளுங்கள். ஒரே ஒரு ஹார்மோன் பரிசோதனை முடிவைவிட இந்த விவரங்கள் பயனுள்ளதாக இருக்கலாம்.

மெனோபாஸ் தொடர்பாக எப்போது மருத்துவரைப் பார்க்க வேண்டும்?
அறிகுறிகள் தூக்கம், மனநிலை, மாதவிடாய், யோனி அல்லது சிறுநீர்ப்பாதை ஆரோக்கியத்தைப் பாதித்தால், வலி ஏற்பட்டால் அல்லது அன்றாட வாழ்க்கையில் சிரமம் இருந்தால் மருத்துவரை அணுகலாம்.
45 வயதுக்கு முன்பே அறிகுறிகள் தொடங்கினால், 40 வயதுக்கு முன்பே மாதவிடாய் நின்றால், அதிக ரத்தப்போக்கு, மாதவிடாய்களுக்கு இடையே ரத்தப்போக்கு அல்லது தொடர்ந்து 12 மாதங்கள் மாதவிடாய் வராத பிறகு எந்த அளவிலும் ரத்தப்போக்கு ஏற்பட்டால் முன்கூட்டியே மதிப்பீடு பெறுங்கள்.
மார்பு வலி, திடீர் மூச்சுத்திணறல், பக்கவாதம் போன்ற அறிகுறிகள், மயக்கத்துடன் கூடிய மிக அதிக ரத்தப்போக்கு, காரணம் தெரியாத கடுமையான வலி அல்லது தீவிர மனநல நெருக்கடி ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ உதவி பெறுங்கள்.
சிறிய முன்னேற்பாடுகள் மருத்துவருடனான சந்திப்பை மேலும் பயனுள்ளதாக மாற்றும்.
மெனோபாஸ் ஆலோசனைக்குத் தயாராவது எப்படி?
பல மாதங்கள் பதிவு செய்து வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை. இந்த விவரங்களை எடுத்துச் செல்லுங்கள்:
- என்ன மாறியுள்ளது, எப்போது தொடங்கியது
- உங்களை அதிகமாகப் பாதிக்கும் இரண்டு அல்லது மூன்று அறிகுறிகள்
- எடுத்துக்கொள்ளும் மருந்துகள் மற்றும் சப்ளிமென்ட்கள்
- தொடர்புடைய மருத்துவ மற்றும் குடும்ப மருத்துவ வரலாறு
- எந்த விஷயத்தில் உதவி பெற விரும்புகிறீர்கள்
‘இது பெரிமெனோபாஸாக இருக்குமா? பரிசோதனைகள் தேவையா? எந்தச் சிகிச்சைகள் எனக்குப் பொருந்தும்? HRT எனக்கு ஏற்றதாக இருக்குமா?’ என்று கேட்கலாம்.
உங்கள் தேவைகளுக்கு ஏற்ப மெனோபாஸ் மருத்துவர் அல்லது மகப்பேறு மருத்துவர், பொது மருத்துவர் அல்லது நாளமில்லாச் சுரப்பி நிபுணர், மனநல நிபுணர், ஊட்டச்சத்து நிபுணர், பிசியோதெரபி அல்லது இடுப்புத்தளத் தசை நிபுணர் ஆகியோர் பராமரிப்பில் உதவலாம்.

மெனோபாஸ் சிகிச்சை: எங்கிருந்து தொடங்குவது?
மெனோபாஸுக்கு அனைவருக்கும் பொருந்தும் ஒரே சிகிச்சைத் திட்டம் இல்லை. அறிகுறிகள், அன்றாட வாழ்க்கையில் அவற்றின் தாக்கம், மருத்துவ வரலாறு மற்றும் உங்கள் விருப்பங்களின் அடிப்படையில் அணுகுமுறை அமையும்.
வாழ்க்கைமுறை மாற்றங்கள், தேவைப்படும் சூழலில் தேர்ந்தெடுக்கப்பட்ட சப்ளிமென்ட்கள், குறிப்பிட்ட அறிகுறிகளுக்கான சிகிச்சைகள், யோனி பகுதியில் பயன்படுத்தும் சிகிச்சைகள் அல்லது HRT ஆகியவை வாய்ப்புகளாக இருக்கலாம். அறிகுறிகள் அன்றாட வாழ்க்கையை குறிப்பிடத்தக்க அளவில் பாதித்தால், விவாதிக்கப்படும் முக்கிய சிகிச்சைகளில் HRT ஒன்றாக இருக்கலாம்.
HRT: தெரிந்துகொள்ள வேண்டியவை
Hormone Replacement Therapy (HRT) என்பது அனைவருக்கும் ஒரே மருந்தை வழங்குவது அல்ல. ஹார்மோன், அளவு, பயன்படுத்தும் முறை ஆகியவை ஒவ்வொருவருக்கும் ஏற்பத் தேர்ந்தெடுக்கப்படுகின்றன.
HRT பெறத் தகுதியான பெண்களுக்கு, திடீர் உடல் சூடு மற்றும் இரவு வியர்வைக்கான மிகவும் பயனுள்ள சிகிச்சை HRT. எலும்பு ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும் உதவலாம். மாதவிடாய் முழுவதும் நிற்பதற்கு முன்பே இதைப் பற்றி மருத்துவருடன் பேசலாம்.
கருப்பை இருந்தால், உடல் முழுவதும் செயல்படும் systemic estrogen உடன் கருப்பையின் உள்படலத்தைப் பாதுகாக்க பொதுவாக progestogen வழங்கப்படும். கருப்பை அகற்றப்பட்ட சில பெண்களுக்கு estrogen மட்டும் பொருத்தமாக இருக்கலாம்.
பயன்படுத்தும் முறையும் முக்கியம்:
- வாய்வழி: மாத்திரை.
- தோல் வழி: patch, gel அல்லது spray மூலம் estrogen வழங்கப்படுகிறது.
- யோனி பகுதியில்: vaginal estrogen cream, pessary அல்லது ring. இது முக்கியமாக யோனி மற்றும் சிறுநீர்ப்பாதைத் திசுக்களில் செயல்படுகிறது.
HRT உங்களுக்குப் பொருந்துமா?
HRT பரிந்துரைக்கும் முன், அறிகுறிகள், மெனோபாஸ் நிலை, ரத்தப்போக்கு வரலாறு, மருத்துவ வரலாறு மற்றும் தனிப்பட்ட அபாயக் காரணிகளை மருத்துவர் மதிப்பிடுவார்.
காரணம் தெரியாத ரத்தப்போக்கு, சில ஹார்மோன் சார்ந்த புற்றுநோய்கள், ரத்தக் கட்டிகள், பக்கவாதம், மாரடைப்பு அல்லது கடுமையான கல்லீரல் நோய் போன்ற நிலைகளுக்கு நிபுணர் மதிப்பீடு தேவைப்படலாம்.
HRT பற்றி யோசிக்கிறீர்கள் என்றால், உங்கள் அறிகுறிகளையும் உடல்நல வரலாற்றையும் தொகுக்க MIROR HRT Assessment உதவும். பின்னர் நிபுணர் வழிகாட்டுதலுடன் தனிப்பட்ட பராமரிப்பும் தொடர் கண்காணிப்பும் பெற MIROR HRT Centre of Excellence-ஐ அணுகலாம்.
தகுதியான பெண்களுக்கு HRT அறிகுறிகளைக் குறைக்கவும் எலும்பு ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும் உதவும். அபாயங்கள், பக்கவிளைவுகள், சிகிச்சைக் காலம் ஆகியவை ஒவ்வொருவருக்கும் மாறுபடும்; அவற்றைத் தொடர்ந்து மறுமதிப்பீடு செய்ய வேண்டும்.
அன்றாட வாழ்க்கையில் மெனோபாஸைச் சமாளிப்பது எப்படி?
‘எல்லா ஹார்மோன்களையும் சமநிலைப்படுத்தும்’ வாழ்க்கைமுறை வித்தை எதுவும் இல்லை. ஆனால் அன்றாடப் பழக்கங்கள் நீங்கள் நன்றாக உணர உதவலாம்.
- திடீர் உடல் சூடு: வெப்பம், மது, காரமான உணவு, மன அழுத்தம் அல்லது போதிய தூக்கமின்மை அறிகுறிகளை அதிகப்படுத்துகிறதா என்று கவனியுங்கள்.
- தூக்கம்: இரவு வியர்வை, பதற்றம், வலி அல்லது சிறுநீர்ப்பாதை அறிகுறிகள் போன்ற எது உங்களை எழுப்புகிறது என்பதைக் கண்டறியுங்கள்.
- கவனச் சிரமம்: நினைவூட்டல்களைப் பயன்படுத்துங்கள்; முக்கிய வேலைகளை எழுதிவையுங்கள்; ஒரே நேரத்தில் செய்யும் வேலைகளின் எண்ணிக்கையைக் குறையுங்கள்.
- உணவு: புரதம், காய்கறிகள், பருப்பு வகைகள், முழுதானியங்கள் அல்லது சிறுதானியங்கள், கொட்டைகள், விதைகள், கால்சியம் நிறைந்த உணவுகளை உணவில் சேருங்கள்.
- உடலியக்கம்: நடைப்பயிற்சியுடன் எதிர்ப்புப் பயிற்சியைச் சேர்ப்பது தசை, எலும்பு மற்றும் வளர்சிதை மாற்ற ஆரோக்கியத்தைப் பாதுகாக்க உதவும்.
அதிக மாதவிடாய் ரத்தப்போக்கு சோர்வுக்குக் காரணமாக இருந்தால், இரும்புச்சத்து அளவைச் சோதிக்க வேண்டுமா என்று மருத்துவரிடம் கேளுங்கள்.
இந்தியாவில் மெனோபாஸ் பற்றிய உரையாடல் ஏன் மாற வேண்டும்?
வசதிகள் குறைவாக உள்ள சமூகங்களைச் சேர்ந்த 32,518 பெண்களிடம் 2025-இல் நடத்தப்பட்ட இந்திய ஆய்வில், 50% பேருக்கு மெனோபாஸின் விளைவுகள் பற்றிய விழிப்புணர்வு இல்லை; 62% பேருக்கு சிகிச்சை வாய்ப்புகள் இருப்பதே தெரியவில்லை.
மாற்றங்கள் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை என்று தெரியாதபோது, அறிகுறிகளை ‘வயதாகிறதால்தான்’ என்று எளிதில் புறக்கணிக்கக்கூடும். அதனால்தான் இந்தத் தகவல் முக்கியம்.
விழிப்புணர்வு என்பது மெனோபாஸை நோயாகப் பார்ப்பதற்காக அல்ல. என்ன மாறுகிறது, எப்போது உதவி பெற வேண்டும், என்னென்ன வாய்ப்புகள் உள்ளன என்பதை அறிந்துகொள்வதற்காக.
மறந்துவிட வேண்டிய சில மெனோபாஸ் தவறான நம்பிக்கைகள்
அறிகுறிகள் தொடங்க மாதவிடாய் நின்றிருக்க வேண்டியதில்லை. எல்லாப் பெண்களுக்கும் திடீர் உடல் சூடு ஏற்படுவதில்லை. இயல்பான மாற்றம் என்பதற்காகச் சிரமங்களைத் தாங்கிக்கொள்ள வேண்டியதில்லை. HRT எல்லாப் பெண்களுக்கும் பாதுகாப்பற்றது அல்ல; அது கர்ப்பத் தடுப்பு முறையும் அல்ல.
சரியான தகவல்கள், உங்களுக்கு ஏற்ற முடிவுகளை எடுக்க உதவும்.
இதை நீங்கள் தனியாகச் சமாளிக்க வேண்டியதில்லை
அறிகுறிகளைப் புரிந்துகொள்ளவோ, HRT பற்றி அறியவோ, எப்போது மருத்துவ உதவி பெறுவது என்று முடிவு செய்யவோ முயல்கிறீர்களா? MIROR மருத்துவர்கள், நிபுணர்கள் மற்றும் நம்பகமான தகவல்களை ஒரே இடத்தில் இணைக்கிறது.
பெரிமெனோபாஸ் மற்றும் மெனோபாஸ் காலத்தில் நிபுணர் வழிகாட்டுதலுக்கு MIROR app-ஐப் பயன்படுத்துங்கள். நிபுணர் தலைமையிலான HRT பராமரிப்பைப் பெற MIROR HRT Centre of Excellence-ஐ அணுகலாம்.

Medically reviewed by,
Dr. Smitha A P, Medical Director, MIROR
Focused on evidence-based HRT, menopause care and preventive health through midlife.
This guide is for general education and is not a substitute for personalised medical advice. Please speak with a qualified healthcare professional about your symptoms and treatment options.